
கோலாலம்பூர், அக்டோபர் 24,செய்திகளை விரைவாக வெளியிடுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அவற்றின் உண்மைத்தன்மை, துல்லியம் மற்றும் நியாயத்தை உறுதிச் செய்ய வேண்டும் எனத் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் ஊடகவியலாளர்களை வலியுறுத்தியுள்ளார்.
தேசிய சைக்கிளோட்ட ஜாம்பவான் டத்தோ Azizul Hasni Awang மற்றும் அவரது பயிற்றுநர் John Beasly தொடர்பாக அண்மையில் எழுந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு செய்தியில் இருதரப்பினர் சம்பந்தப்பட்டிருந்தால், அதனை வெளியிடுவதற்கு முன்பு இருவரின் விளக்கங்களையும் பெறுவது அவசியம் என்றார் அவர்.
குறிப்பாக, ஒருவரின் நற்பெயரைப் பாதிக்கக்கூடிய செய்திகளில் கூடுதல் கவனம் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாட்சப் அல்லது குறுஞ்செய்தி மூலம் தொடர்புகொள்ள முடியாவிட்டால், தொலைபேசியில் நேரடியாக அழைத்து விளக்கம் பெற முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேவேளையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் கருத்து தெரிவிக்க மறுத்தால், அதனைச் செய்தியில் தெளிவாகக் குறிப்பிடலாம் என்றார் அவர்.
“The fastest is not always the rightest” – அதாவது, முதலில் செய்தியை வெளியிடுபவரே எப்போதும் சரியானவராக இருக்க வேண்டிய அவசியமில்லை என ஃபாஹ்மி நினைவூட்டினார்.
இதனிடையே, மலேசியாவுக்குப் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கும், திரைக்குப் பின்னால் உழைக்கும் பயிற்றுநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.



