Latestமலேசியா

“மலேசிய இந்தியச் சமுதாயத்தின் ஈடில்லா தலைவர்”: துன் சாமிவேலுவின் 90-ஆவது பிறந்தநாளில் விக்னேஸ்வரன் புகழாரம்

கோலாலம்பூர், மார்ச்-8 – மலேசிய இந்தியர்களின் ஈடு இணையற்ற கம்பீரத் தலைவராக போற்றப்படும் ம.இ.கா முன்னாள் தேசியத் தலைவர் துன் எஸ். சாமிவேலு அவர்களின் 90-வது பிறந்தநாள் இன்று நினைவுகூறப்படுகிறது.

மறைந்தாலும், மலேசிய இந்தியர் சமூகத்தின் இதயங்களில் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் புகழாரம் சூட்டினார்.

1936 மார்ச் 8-ஆம் தேதி பிறந்த துன் சாமிவேலு, ஒரு சாதாரண அலுவலக உதவியாளராக தனது பணியைத் தொடங்கி பின்னர் கட்டடக்கலை நிபுணராகவும், தொடர்ந்து 31 ஆண்டுகள் ம.இ.கா தேசியத் தலைவராகவும் உயர்ந்தவர்…

பொதுப்பணி அமைச்சராக இருந்த காலத்தில் பினாங்கு பாலம் மற்றும் வடக்கு–தெற்கு நெடுஞ்சாலை உள்ளிட்ட பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுத்து, நவீன மலேசியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்…

கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் என்ற நம்பிக்கையுடன், இந்திய மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்க AIMST பல்கலைக்கழகம் மற்றும் MIED வழியாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கியவர்…

அரசியல் துறையிலும் பல இளம் தலைவர்களை உருவாக்கியவர் சாமிவேலு.

குறிப்பாக தாம், நடப்புத் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் உள்ளிட்ட பலரை அரசியலில் உருவாக்கிய பெருமையும் அவருக்கே சேரும்.

துன் சாமிவேலு மலேசிய இந்தியர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருந்தவர; அவர் அமைத்த அடித்தளத்தின் மேல் தான் இன்று ம.இ.கா வலுவாக நிற்கிறது என்றும் விக்னேஸ்வரன் நினைவுகூர்ந்தார்.

ஒரு தனிமனிதனாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, முழு சமூகத்தின் அடையாளமாக மாறிய துன் சாமிவேலுவின் பெயரும் சாதனைகளும் மலேசிய மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என விக்னேஸ்வரன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!