
கோலாலம்பூர், ஏப்ரல்-16, நேற்று தனது செய்தித்தாளின் முதல் பக்கத்தில் வெளியிட்ட கார்ட்டூன் சித்திரத்தில் பிறை நிலவு இல்லாமல் ஜாலூர் ஜெமிலாங் தேசியக் கொடியைத் தவறாக வெளியிட்ட Sin Chew Daily மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
அந்த சீன மொழி நாளிதழின் “தொழில்நுட்ப தவறு” நாட்டின் இறையாண்மைக்கு அவமரியாதை என்பதோடு, தேசபக்தி இல்லாததையும் பிரதிபலிப்பதாக அப்பிரிவின் தலைவர் அப்னான் ஹமிமி தைப் அசமுடின் (Afnan Hamimi Taib Azamudden) கூறினார்.
மலேசியக் கொடியில் பிறை நிலவு ஒரு முக்கிய சின்னமாகும்; காரணம், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் படி தேசிய மதமான இஸ்லாத்தை அது பிரதிநிதிக்கிறது.
“எனவே இது ஒரு வகையான தேச துரோகமாகும்; இதை அப்படியே மன்னிக்க முடியாது; மன்னிப்பு கேட்டு விட்டதால், நடவடிக்கைகளிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது என்றார் அவர்.
“இது Sin Chew Daily ஆசிரியர் குழுவின் தேசப் பற்று மற்றும் நாட்டின் மீதான விசுவாசம் குறித்து முக்கிய கேள்விகளை எழுப்புகிறது” என facebook-கில் அவர் கூறினார்.
Sin Chew-வுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கத் தவறினால், இது போன்ற செயல்கள் குறிப்பாக இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கதவுகளைத் திறந்து விட்டு விடுமென அஃப்னான் எச்சரித்தார்.
‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சையில் ஏரா மலாய் வானொலிக்கு 250,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஜாலூர் கெமிலாங் கார்ட்டூன் சித்திரத்தில் தவறு இடம் பெற்றதற்காக நேற்று வருத்தம் தெரிவித்த Sin Chew Daily நிர்வாகம், அந்தத் ‘தொழில்நுட்ப தவறு’ உடனடியாக சரிசெய்யப்பட்டதாகவும், திருத்தப்பட்ட படம் இன்றைய பதிப்பில் வெளியிடப்படுமென்றும் கூறியது