ஸாரா கெய்ரினா விவகாரம் 5 இளம்பெண்கள் பகடிவதை குற்றத்தை மறுத்தனர்

கோத்தா கினபாலு – ஆகஸ்ட் 20 – மரணம் அடைந்த 13 வயது ஸாரா கைரினா மகாதீரை ( Zara Qairina Mathir ) பகடிவதை செய்தது தொடரபாக கோத்தா கினபாலு சிறார் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து பதின்மவயது பெண்களும் குற்றச்சாட்டை மறுத்தனர். 2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழ் அடையாளங்களை வெளியிட முடியாத 18 வயதுக்குட்பட்ட அந்த அனைத்து பெண்களும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எல்சி பிரைமஸ்
( Elsie Primus) முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபின் , அதனை மறுத்தனர்.
ஜூலை 15 ஆம் தேதி பாப்பரில் உள்ள ஒரு பள்ளியில் இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை விசாரணைக்கு வந்த ஜாரா கைரினாவை பகடிவதை செய்ததாக அவர்களுக்கு எதிரான குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 507C (1) இன் கீழ் கொண்டுவரப்பட்டு, அதே சட்டத்தின் பிரிவு 34 உடன் சேர்த்துப் படிக்கப்பட்டது.
இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு ஆண்டுவரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். குற்றஞ்சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் உள்நாட்டை சேர்ந்த ஒருவரின் உத்தரவாதத்தோடு 5,000 ரிங்கிட் ஜாமின் மற்றும் 1,000 ரிங்கிட் வைப்புத் தொகை அனுமதிக்கப்பட்டதாக அரசு தரப்பு துணை வழக்கறிஞர் Nor Azizah Mohamad நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 25ஆம் தேதி மற்றும் அக்டோபர் 16ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.