
மண்டாலே, மார்ச்-30 – சக்கி வாய்ந்த நில நடுக்கத்தால் சீரழிந்துள்ள மியன்மாரின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மண்டாலேவில், மீட்புப் பணிகள் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ன.
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட அச்சம்பவத்தில் 1.7 மில்லியன் பேர் வசிக்கும் அந்த கலாச்சார நகரில் ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகின.
இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கும் நிலையில் மீட்புப் பணியாளர்கள் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர்.
ஆனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால், அவசர மீட்புக் குழுவினர் கையடக்க ஜெனரேட்டர்களையே நம்பியிருக்கின்றனர்.
“24 மணி நேரங்களாக தூக்கமில்லாமல் தேடிக் கொண்டிருக்கிறோம்; பலர் களைத்துப் போயுள்ளனர்; இப்படி திணறிக் கொண்டிருக்கும் எங்களுக்கு மேலும் உதவிகள் தேவை” என மீட்புப் பணியாளர் ஒருவர் சொன்னார்.
போதுமான ஆட்கள் உள்ளனர்; ஆனால் சடலங்களைக் கொண்டுச் செல்ல போதுமான வாகனங்கள் இல்லை; 10 முதல் 20 சடலங்களை சிறிய டிரக்குகளில் அடைத்துச் செல்கிறோம் என்றார் அவர்.
அடுக்குமாடிக் கட்டடங்கள் ஏராளமாக சரிந்திருப்பதால் ஒவ்வொன்றிலும் குறைந்தது 100 பேராவது சிக்கியிருப்பர்; எனவே மியன்மார் அரசாங்கமும் உலக நாடுகளும் உதவிக் கரம் நீட்டினால் பெரும் உதவியாக இருக்குமென மீட்புப் பணியாளர்கள் நம்புகின்றார்.
மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட அந்நில நடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 1,600 பேரைத் தாண்டியுள்ளது; மியன்மாரில் மட்டுமே 1,644 பேருக்கும் மேல் மரணமடைந்து, 3,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மியான்மாரை நேற்று மீண்டும் மற்றொரு நில நடுக்கம் உலுக்கியது குறிப்பிடத்தக்கது.
Pyinmana எனுமிடத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 5.20-க்கு ரிக்டர் அளவில் 5.1-ராக அந்நில நடுக்கம் பதிவாகியது.
அதன் அதிர்வுகள் அண்டை நாடுகளாள லாவோஸ், தாய்லாந்து, சீனா ஆகியவற்றிலும் உணரப்பட்டன.
எனினும் சேத விவரங்கள் தெரியவரவில்லை.
பெரிய பூகம்பங்கள் ஏற்படும் சமயங்களில் இது போன்ற தொடர் நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கமாகும்.