
புத்ராஜெயா, ஆகஸ்ட்-28 – பருவமழையால் மோசமடைந்துள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பங்களால் பாதிக்கப்பட்ட வட இந்தியாவிலிருந்து, மலேசியர்களை விரைந்து தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனைத் தெரிவித்தது.
இதுவரை ஜம்மு மற்றும் லடாக்கில் (Ladakh) சிக்கிக் கொண்ட மலேசியர்கள் குறித்து தகவல் கிடைத்து, அவர்களை புது டெல்லியில் உள்ள மலேசிய உயர் ஆணையம் தொடர்புகொண்டது.
ஆக சீக்கிரம் கிடைக்கும் விமானத்தில் அவர்கள் மலேசியா கொண்டு வரப்படுவர் என விஸ்மா புத்ரா கூறியது.
தற்போதைக்கு இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலவரங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் பதிந்துகொண்டு அவர்களின் உத்தரவுகளை முறையாகப் பின்பற்ற வேண்டுமென்றும் விஸ்மா புத்ரா அறிவுறுத்தியது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவி (Vaishno Devi) கோயிலுக்கு அருகே நிகழ்ந்த நிலச்சரிவில் குறைந்தது 33 பேர் பலியாகி, 20 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.