மலேசியர்களின் பெயரில் சட்டவிரோத வணிகம்: சிலாங்கூரில் 13 வெளிநாட்டினர் சிக்கினர்

செப்பாங், ஜூன்-11,மலேசியர்களின் பெயரில் பதிவுச் செய்யப்பட்ட வணிக உரிமங்களைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக மளிகைக் கடைகளை நடத்தி வந்த 13 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் குடிநுழைவு இலாகா அதிரடியாகக் கைதுச் செய்துள்ளது.
சிலாங்கூர், சிப்பாங்கில் 6 மளிகைக் கடைகள் மற்றும் மினி மார்க்கெட்டுகளில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சோதனையிடப்பட்ட வணிகங்கள் அனைத்தும் உள்ளூர்வாசிகளின் பெயரில் உரிமம் பெற்றிருந்தாலும், அவற்றின் முழு நிர்வாகமும் சமூக வருகை பெர்மிட்டுகளைத் தவறாகப் பயன்படுத்திய வெளிநாட்டினராலேயே நடத்தப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்தக் கடைகளில் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை குறிப்பாக வங்காளதேசிகளை ஈர்க்கும் பொருட்கள் விற்கப்பட்டதோடு, அங்கு பயன்படுத்தப்பட்ட QR-Code கட்டண முறைகள் உள்ளூர் உரிமையாளர்களுக்குப் பதிலாக வெளிநாட்டினரின் வங்கிச் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைதுச் செய்யப்பட்டவர்களில் 10 இந்தோனேசியர்களும், 3 வங்காளதேசிகளும் அடங்குவர்.
அவர்கள் அனைவரும் மேல் விசாரணைக்காக புத்ராஜெயா குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நாட்டின் குடிநுழைவுச் சட்டங்களை மீறுபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவ்விலாகா எச்சரித்துள்ளது.



