
குவாந்தான், மே-9-இயற்கை வள மேலாண்மை மற்றும் மாநில வருவாய் விவகாரத்தில் மத்திய அரசுக்கும் பஹாங் மாநிலத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.
பஹாங் பட்டத்து இளவரசர் தெங்கு ஹசானால் இப்ராஹிம் ஆலாம் ஷா, நேற்று மாநில சட்டமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் அது வெட்ட வெளிச்சமானது.
புத்ராஜெயாவின் தலையீட்டுக்குத் தனது அதிருப்தியைத் தெரிவித்த அவர், ஆற்று மணல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதைக் கடுமையாகச் சாடினார்.
மணல் மற்றும் நிலம் தொடர்பான வருவாய் மாநிலத்தின் உரிமை என்று குறிப்பிட்ட இளவரசர், மணல் படிமங்களை அகற்றுவது வருமானத்திற்காக மட்டுமல்ல, வெள்ளத்தைத் தடுப்பதற்கும் மிக அவசியம் என்றார்.
கடந்த காலங்களில் இதன் மூலம் மாநிலத்திற்குப் பல மில்லியன் ரிங்கிட் வருமானம் கிடைத்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இவ்விவகாரத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட தெங்கு ஹசானால், புத்ராஜெயா மீது பஹாங் நடவடிக்கை எடுக்கும் சூழலுக்குத் தள்ளி விடாதீர்கள் என்றும் நினைவுறுத்தினார்.
இந்நிலையில், மாநிலங்கள் தங்களின் வருவாயை அதிகரிக்க முயன்றாலும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்க இயற்கை வளங்களை எடுப்பதில் கடுமையான கட்டுப்பாடு அவசியம் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
மாநில வருவாய் முக்கியமானதுதான், ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மக்களின் நலனும் முன்னுரிமை பெற வேண்டும்.
மேலும், மத்திய அரசு பஹாங் மாநிலத்திற்கு பெரிய அளவில் நிதி உதவி வழங்கியுள்ளதாகவும், இது குறித்து நிதி அமைச்சு மேலும் விளக்கம் அளிக்கும் என்றும் அன்வார் தெரிவித்தார்.



