Latestமலேசியா

சுல்தான் இஸ்கண்டார் கட்டடம் மற்றும் சுல்தான் அபு பகார் வளாகத்தில் அதிகமான குடிநுழைவு சோதனை முகப்புகள் திறப்பு

ஜோகூர் பாரு, மார்ச் 8 – ஜோகூர் பாருவிலுள்ள, சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்திலும், சுல்தான் அபு பகார் வளாகத்திலும் , மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான சோதனை பகுதியிலுள்ள, இரு முக்கிய நுழைவாயில்களில், கைமுறையாக சோதனை செய்ய, மாநில குடிநுழைவுத் துறை அதிகபட்சமான முகப்புகளை திறந்துள்ளது.

குறிப்பாக, சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்திலுள்ள, மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான சோதனை நுழைவாயிலில் நெரிசலை குறைக்க 50 முகப்புகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் 39 கைமுறையில் செயல்படும் வேளை ; எஞ்சிய 11 தானியங்கி முறையில் இயங்கும் என ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குனர் பஹாருடின் தாயார் தெரிவித்தார்.

அதே போல, நாட்டை விட்டு வெளியேறும் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கும் அந்த வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுல்தான் அபு பகார் வளாகத்திலுள்ள நுழைவாயிலில் 25 முகப்புகள் உள்ளன. அதில் 19 முகப்புகள் செயல்படும் வேளை ; இதர ஆறு பராமரிப்பு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டை விட்டு வெளியேறும் பகுதியிலும், மோட்டார் சைக்கிளோட்டிகளின் வசதிக்காக 20 தானியங்கி முகப்புகள் செயல்படும் வேளை ; இதர ஐந்து முகப்புகளை தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதனால், அவ்விரு நுழைவாயில்களிலும் போக்குவரத்து கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக, பஹாருடின் சொன்னார்.

முன்னதாக, அவ்விரு நுழைவாயில்களிலும் ஏற்படும் நெரிசலுக்கு விரைந்து தீர்வுக் காண மாநில குடிநுழைவுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நேற்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹப்பிஸ் காசி வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!