Latestமலேசியா

மித்ராவின் IPT 4.0 உதவி; 8,791 உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு நிதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது

புத்ராஜெயா, மார்ச்-15 – கடந்தாண்டு, மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ராவின் IPT 4.0 உதவி நிதிக்கு விண்ணப்பித்தவர்களில் 8,791 பேருக்கு நிதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உயர் கல்விக் கூடங்களுக்கு நுழையும் B40 இந்திய மாணவர்களுக்கான அச்சிறப்பு நிதிக்கு மொத்தம் 25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொது மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 12,626 மாணவர்கள் அதற்கு விண்ணப்பித்திருந்தனர்; ஆனால் நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்யாத காரணத்தால் 3,835 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

அவர்கள் முறையே B40 குடும்பத்தைச் சேராதவர்கள், மூன்றாவது மற்றும் நான்காவது கல்வியாண்டில் இருப்பவர்கள், டிப்ளோமா மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்பு அல்லாத மற்ற படிப்புகளை வைத்திருப்பவர்கள் ஆவர்.

ஆக விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட எஞ்சிய 8,791 பேருக்கும் _one-off_ முறையில் அதாவது ஒரு முறை மட்டும் வழங்கப்படும் இவ்வுதவி நிதி, BSN வங்கி வாயிலாக கட்டம் கட்டமாக சேர்ப்பிக்கப்படும்.

தங்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை மாணவர்கள் மித்ரா இணைய அகப்பக்கத்தில் இப்போதே சரி பார்க்கலாம்.

உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் முதலாம் மற்றும் இரண்டாமாண்டு B40 இந்திய மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக, இந்த IPT MITRA திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!