
டுங்குன் , ஜன 31 – தன்னை தாக்கிய கரடியுடன் எதிர்த்து போராடிய ஆடவர் ஒருவர் காயம் அடைந்தார். டுங்குன் (Dungun) Kamapung Telembuh Jerangau Sungai யிலுள்ள செம்பனை தோட்டத்தில் காலை 11 மணிக்கு ஏற்பட்ட அந்த சம்பவத்தில் 40 வயதுடைய நிக் அசார் தாவுத் (Nik Azhar Daud) தலையின் பின்புறம், கழுத்து ,கால் மற்றும் வலது கையின் பின்பகுதியில் காயம் அடைந்ததைத் தொடர்ந்து தற்போது கோலாத் திரெங்கானு சுல்தானா நூர் சாஹிரா (Sultanah Nur Zahirah) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எருமை மாடு கட்டப்பட்டிருப்பதை சரிபார்க்க சம்பந்தப்பட்ட பண்ணை பகுதிக்கு Nik Azhar சென்றபோது கரடியினால் தாக்கப்பட்டதாக அவரது மனைவியான ரோசுஹய்டா மொக்தார் ( Roshuhaida Mokhhtar) தெரிவித்தார்.
Nik Azhar தண்ணீர் குடித்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, திடீரென பின்னால் வந்த கருங்கரடி அவரது கழுத்தை கடித்து குதறியதாக கூறப்பட்டது.
கரடியுடன் போராடிய போது, தனது இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து அவர் பலமுறை குத்தியதைத் தொடர்ந்து கரடி அங்கிருந்து தப்பியோடுவதற்கு முன்பு அவரை விடுவித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.