
கோலாலம்பூர், பிப்ரவரி-26 – ஆபத்து அவசர நேரங்களில் பயன்படாத தொழில்நுட்பம் இருந்து பயன் என்ன என, டைனமிக் சீனார் காசே மலேசியா சமூக நலச் சங்கத்தின் தலைவர் டத்தோ என். சிவகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஈப்போ, பத்து பெர்ச்சாமில் சாலை விபத்தில் படுகாயமடைந்த பெண்ணொருவர், ஆம்புலன்ஸ் வண்டிக்காகக் காத்திருந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
இது போல ஆம்புலன்ஸ் வருவதற்கு 3 மணி நேரங்கள் ஆகுமென விபத்தில் சிக்கியவர்களிடம் தெரிவிக்கப்பட்ட சம்பவங்கள் எல்லாம் தன் காதுக்கு எட்டியுள்ளன.
அரசாங்க பட்ஜெட்டில் சுகாதார அமைச்சுக்கு இரண்டாவது பெரிய ஒதுக்கீடு கிடைத்தும், இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது வருத்தமளிக்கின்றன.
நகரங்களுக்கே இந்த நிலைமை என்றால், கிராமப் புறங்களின் நிலைமை நினைத்துப் பாருங்கள்.
ஆம்புலன்ஸ் போன்ற அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லையென்றால் மக்கள் என்ன செய்வார்கள்?
வாய் வலிக்க AI பற்றி பேசுகிறோம்; ஆனால் ஆபத்துக்கு வழி காண கூட நம்மால் முடியவில்லை என்பது மிகுந்த வேதனையாகும்.
MySejahtera போன்ற செயலி எல்லாம் எதற்காக இருக்கின்றன? ஆபத்து அவசர நேரங்களில் அதனைப் பயன்படுத்த அமைச்சு வழி காணக் கூடாதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆம்புலன்ஸ் தாமதமாக வரும் சம்பவங்கள் குறித்து
மக்கள் பிரதிநிதிகளும் பேசுவதில்லை.
அசம்பாவிதங்கள் நிகழ்ந்த பிறகு அறிக்கை விடுவதில் பயனில்லை.
எனவே இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி தீர்வு காண அவர்கள் முயல வேண்டும்.
இல்லையென்றால் நமது கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும் மேலும் உயிர்களைப் பறிகொடுக்க நேரிடுமென டத்தோ சிவகுமார் எச்சரித்தார்.