
புத்ரஜெயா, ஆகஸ்ட் 21- மாணவர் பாதுகாப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆறு கோரிக்கைகளை அடுத்த 30 நாட்களுக்குள் நிறைவேற்றத் தவறினால், கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இன்று காலை கல்வி அமைச்சு கட்டிடத்தின் முன் நடைபெற்ற ‘உண்டூர் ஃபத்லினா’ (‘UndurFadhlina’) பதவிவிலகக் கோரும் பேரணியில், மலேசிய இஸ்லாமிய மாணவர்கள் கூட்டமைப்பான Gamis மற்றும் மலேசிய மக்கள் உரிமை முன்னெடுப்பு கூட்டமைப்பான Haram- ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 20 பேர் கலந்துக் கொண்டனர்.
ஜாரா கைரினா மகாதீரின் மரணம், கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் நீண்டகாலமாக அதிகரித்து வரும் பகடிவதை குற்றங்களைக் கையாள்வதில் ஃபட்லினா தோல்வியடைந்து விட்டதாக Gamis தலைவர் அசாமுடின் சாஹார் (Azamuddin Sahar) குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் பேரணியின் ஏற்பாட்டளர்களின் மகஜரை கல்வி அமைச்சின் பிரதிநிதி பெற்றுக் கொண்டார்.
பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கிடையிலான எண்ணிக்கை விகிதத்தை அதிகரித்து உளவியல் ரீதியான சமூக ஆதரவை வலுப்படுத்துதல், பகடிவதை தொடர்பான ரகசிய புகார்களுக்கு 24 மணிநேர ஹோட்லைன் (hotline) சேவை வழங்குதல் மற்றும் ஆசிரியர்கள், விடுதி வார்டன்களுக்கு ‘அதிர்ச்சி-சம்பவங்களைக் கையாளும் பயிற்சி’அளித்தல் போன்றவை கோரிக்கைகளில் உள்ளடங்கும்.
மேலும் பெற்றோருக்கான கட்டாய கல்வி கருத்தரங்குகள், பகடிவதை புகார்களை மதிப்பாய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைத்தல் மற்றும் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை அடைவுநிலையை தெரியப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளும் கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து பள்ளிகளில் சிசிடிவி பொருத்துதல், ஆசிரியர்கள், காவல்துறை மற்றும் பெற்றோர் சங்கங்களை உள்ளடக்கிய சிறப்பு பகடிவதை விசாரணை பிரிவை அமைத்தல் போன்ற கூடுதல் நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அதேசமயத்தில் பகடிவதை சம்பவங்கள் அற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் யோசனை மாணவர்களுக்கு பாதகமானது என்றும் இது சம்பவங்களை மறைத்து பள்ளியின் நற்பெயரை காப்பாற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அசமுதீன் குறிப்பிட்டார்.