
ரவுப், ஆகஸ்ட் 7- ரவுப்பிலுள்ள Gunung Benum காட்டு வள கையிருப்பு பகுதியை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக நடப்பட்ட 3,000க்கும் மேற்பட்ட டுரியான் மரங்கள் வெட்டப்பட்டன. ஜூலை 21 ஆம் தேதி தொடங்கிய 18 நாள் டுரியான் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின்போது Musang King, IOI, D24 ஆகிய வகைகளைச் சேர்ந்த டுரியான் பழ மரங்கள் வெட்டப்பட்டன.
பஹாங் மாநிலத்தில் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என மேன்மை தங்கிய பஹாங் சுல்தான் Al Sultan Abdullah உத்தரவிட்டதைத் தொடர்ந்து 3 முதல் 40 வயடைய டுரியான் மரங்கள் அழிக்கப்பட்டன.
இம்முறை மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையில் Gunung Benum காட்டு வளப் பகுதியில் 250 ஹெக்டர் பரப்பளவு கொண்ட ஆக்கிரமிக்கப்பட்ட டுரியான் பழ தோட்டங்கள் அடங்கும்.
இந்த நடவடிக்கை முழுமையடைவதற்கு இரண்டு மாதங்கள் பிடித்ததாக பஹாங் வனத்துறை இயக்குநர் ஜைனுடின் ஜமாலுடின் ( Zainuddin Jamaluddin ) தெரிவித்தார். டுரியான் மரங்கள் மட்டுமின்றி வனப்பகுதியில் உள்ள Petai, ரம்புத்தான், மங்குஸ்தீன், உட்பட இதர பல்வேறு பழ மரங்களும் இந்த நடவடிக்கையில் வெட்டப்பட்டதாக அவர் கூறினார்.