செமோரில் புலி நடமாட்டத்தை விசாரிக்கச் சென்ற PERHILITAN ஊழியர்களுக்கு நேரில் ‘காட்சிக் கொடுத்த’ புலி

செமோர், ஜனவரி-17-பேராக், செமோரில் புலி நடமாட்டம் குறித்த புகாரை விசாரிக்கச் சென்ற இடத்தில் PERHILITAN வனவிலங்கு அதிகாரிகளின் கண்முன்னே புலி நேருக்கு நேர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மலாயாப் புலிகளின் பாதுகாப்பு சரணாலயத்தைச் சேர்ந்த அந்த 6 அதிகாரிகளும், சம்பவ இடத்தில் அப்போது தான் வாகனத்திலிருந்து இறங்கினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அப்புலி முன்னே தோன்றியதை அவர்களில் ஒருவரும் எதிர்பார்க்கவில்லை.
சற்று நேரத்தில் உடல் வெடவெத்துப் போனது.
என்றாலும், அசம்பாவிதத்தைத் தவிர்க்க வாகனத்தை மெதுவாக பின்னோக்கி செலுத்தினர்.
ஆனால், புலி யாரையும் தாக்கவில்லை, அமைதியாக நடந்துச் சென்று விட்டது.
Ilmi Narawi என்ற டிக் டோக் கணக்கில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ வைரலாகி, 2.5 மில்லியன் பார்வைகள் பெற்றது.
75 கிலோ எடையுடைய அப்புலி பின்னர் PERHILITAN வைத்த பொறியில் சிக்கி பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு, சுங்காய் வனவிலங்கு மீட்பு மையத்துக்கு அனுப்பப்பட்டது.
அதிகாரிகள் காயமின்றி தப்பினர்.



