மக்களின் குரலை மேடைக்கு கொண்டுவரும் தலைவர் நூருல் இசா- சண்முகம் மூக்கன்

கோலாலம்பூர், மே 8 – மக்களின் குரலை மேடைக்கு கொண்டுவரும் தலைவராக மட்டுமின்றி சீர்த்திருத்தின் சின்னமாகவும் நூருல் இசா அன்வார் திகழ்ந்து வருவதாக பிரதமரின் சிறப்பு பணிகளுக்கான முதன்மை அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைத்தன்மை விரிவான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நூருல் இசா தலைமைத்துவம் ஆக்கப்பூர்வமானதாக திகழமுடியும். இந்திய சமூக விவகாரங்களில் அவரது அணுகுமுறை மலேசிய Madani கட்டமைப்பிற்கு ஏற்ப இருப்பதோடு இது நீதி மற்றும் சீரான வளர்ச்சியையும் வலியுறுத்துகிறது.
பி.கே.ஆர் துணைத் தலைவராக நூருல் இசா பரிந்துரைக்கப்பட்டிருப்பது கட்சியின் நடவடிக்கைகளை வலுப்படுத்த ஒரு பெரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது என இன்று வெளியிட்ட அறிக்கையில் சண்முகம் சுட்டிக்காட்டினார்.
தேசிய ஒற்றுமை மற்றும் இன வேறுபாடின்றி மக்களின் நல்வாழ்வுக்காகப் போராட்டத்திலும் தேசிய வளர்ச்சி செயல்பாட்டில் இந்திய சமூகத்தின் ஈடுபாடும் அவர்களின் குரலும் அதிகமாக ஒலிப்பதை நூருல் இசா உறுதிப்படுத்த முடியும். பெர்மாத்தாங் பாவ்வில் அவர் இனப் பாகுபாடு இன்றி மேற்கொண்ட முயற்சிகள் மக்களுக்கு நல்ல பலனைத் தந்துள்ளது.
கல்வி, TVET எனப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி போன்றவற்றில் அவர் காட்டிவரும் முயற்சிகளும் ஈடுபாடும் இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் திறன்களைப் பெறவும் இந்திய சமூகத்திற்கு மாற்றுப் பாதைகள் தேவை. மேலும் பி.கே.ஆர் கட்சிக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் பி.கே.ஆர் துணைத்தலைவர் பதவிக்கு நூருல் இசா சரியான தேர்வாக இருக்க முடியும் என சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.