
கோலாலம்பூர், டிசம்பர்-8 – அடுத்தப் பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் போது, நடப்பில் எந்த கட்சிக்கு தொகுதி சொந்தமோ அந்த கட்சிக்கே தொகுதியை ஒதுக்கும் முறையை தேசிய முன்னணி கைவிட வேண்டும்.
அந்நடைமுறையை ம.இ.கா எதிர்ப்பதாக அதன் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
அதே நடைமுறையைப் பின்பற்றியிருந்தால் முன்பு கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவுக்கு ம.இ.கா விட்டுக் கொடுத்திருக்காது என அவர் சுட்டிக் காட்டினார்.
கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் நடைபெற்ற தேசிய முன்னணியின் 50-ஆம் ஆண்டு பொன்விழா மாநாட்டில் உரையாற்றிய போது டத்தோ ஸ்ரீ சரவணன் இதனை வலியுறுத்தினார்.
கடந்த 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் போது நாம் ஒருவகையில் “விளையாடப்பட்டோம்” என ஏமாற்றத்தையும் அவர் வெளிப்படுத்தினார். கூட்டணி கட்சி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போது ம.இ.கா-வுக்கு எத்தனை தொகுதி வேண்டுமென அம்னோ துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ மொஹமட் ஹசான் பட்டியல் கேட்டார். நாங்களும் கொடுத்தோம். கடைசியில் அது வெறுமனே காப்பி குடித்துவிட்டு ஏப்பம் விட்ட வெட்டிப் பேச்சுப் போல் ஆகிவிட்டது என்றார் சரவணன். உங்களுக்கு நீங்கள் வெற்றி பெற்ற ஒரு தொகுதிதான். விருப்பம் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டனர் என்றார் அவர்.
இது மீண்டும் நடைப்பெறாமல் எச்சரிக்கையாக பார்த்துக் கொள்ள வேண்டு என்றார் அவர்.
இதனிடையே, சரவணன் தமதுரையில், முன்னாள் பிரதமரும் தேசிய முன்னணியின் முன்னாள் தலைவருமான டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் சேவையை நினைவுக் கூர்ந்தார்.
பின் தங்கிய இந்தியச் சமூகத்துக்காக அள்ளித் தந்தவர் என்றும், சமூகப் பொருளாதாரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியவரென்றும் பேராளர்களின் பலத்த கைத்தட்டலுக்கு மத்தியில் சரவணன் நஜீப்புக்கு நன்றி பாராட்டினார்.
இந்தியச் சமூகத்துக்கு உளமாற உதவிய நஜீப் போல ஒரு மகத்தான பிரதமரை, தனது பொது வாழ்க்கையில் பார்த்ததில்லை என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் கூறினார்.
2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சியை இழந்த பிறகு, அதன் தலைவர் பதவியிருந்து விலகிய 71 வயது நஜீப் SRC வழக்கில் தற்போது சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார்.