
சிரம்பான், அக்டோபர் 16 – நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றக் கூட்டம் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி ஒத்திவைக்கப்பட்டதற்கு பக்காத்தான் ஹராப்பான் (Pakatan Harapan) சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜே. அருள் குமார் கூறுகையில், அக்டோபர் 16 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை என்றார். கூட்டம் நடைபெறுவதாக மாநில சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்திலும் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த ஒத்திவைப்பால், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மாநில அரசிடம் கேள்வி எழுப்பவும் விளக்கம் கோரவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், நவம்பர் 26ஆம் தேதி நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்துடன் வழக்கமான சட்டமன்றக் கூட்டத்தை இணைக்காமல், ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மாநில முதல்வர் டத்தோ இஸ்மாயில் லாசிம் (Datuk Ismail Lasim) முன்னதாக, மாநில பட்ஜெட் தாக்கல் மற்றும் அதிகாரப்பூர்வத் தொடக்க நிகழ்ச்சிக்காக சட்டமன்றக் கூட்டம் அடுத்த மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.



