
புத்ராஜெயா, நவம்பர் 6 – நாட்டில் 5.5 மில்லியனுக்கும் மேற்பட்ட போக்குவரத்து துறை அதாவது JPJ சமன்கள் இதுவரை கட்டப்படாமல் இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு ஜனவரி 1க்குள் அச்சமன்களை செலுத்தாதவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அவர்கள் ‘black list’ பட்டியலில் நிச்சயமாக இணைக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, அந்த வாகன உரிமையாளர்கள் சாலைவரி (road tax) மற்றும் ஓட்டுநர் உரிமத்தை (lesen memandu) புதுப்பிக்க இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நவம்பர் 1 முதல் டிசம்பர் 30 வரை, அனைத்து வகையான JPJ சமன்களுக்கும் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படுவதால், பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களின் சமன்களை உடனடியாக செலுத்தி விட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது.
சட்டத்தைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதற்கும் குற்றச்செயல்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் அமைச்சு இத்தகையை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.



