Latestமலேசியா

சிறார் இஸ்லாம் மதமாற்றத்திற்கு பெற்றோரில் ஒருவரின் சம்மதமே போதும்; அரசு தரப்பு வாதம்

கோலாலம்பூர், பிப்ரவரி-4-சிறாரை இஸ்லாத்துக்கு மதம் மாற்றுவதற்கு பெற்றோரில் ஒருவரின் சம்மதமே போதுமானது என, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதிட்டுள்ளது.

“கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் ‘பெற்றோர்’ என்ற சொல் தாய் அல்லது தந்தை என ஒருவரையே குறிக்கிறது; மாறாக இருவரையும் அல்ல. எனவே பிள்ளைகளின் மதங்களை முடிவுச் செய்ய ஒருவரின் சம்மதமே போதுமென”, அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் Ahmad Hanir Hambaly வாதிட்டார்.

சிறார்களின் ஒருதலைப்பட்ச மதமாற்றத்தை அனுமதிக்கும் 7 மாநில சாசனங்களை எதிர்த்து, இந்திரா காந்தியும் இதர 13 பேரும் தொடர்ந்துள்ள வழக்கில் வாதிட்ட போதே அவர் அவ்வாறு சொன்னார்.

பெர்லிஸ், கெடா, மலாக்கா, நெகிரி செம்பிலான், பேராக், ஜோகூர் மற்றும் கூட்டரசு பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அச்சட்ட விதி, 2018 -ஆம் ஆண்டில் இந்திரா காந்தி வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு நேர்மாறானது ஆகும் என வாதிகள் தரப்பு வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

அப்போது, சிறாரின் மதமாற்றத்திற்கு தாய் – தந்தை இருவரின் சம்மதமும் அவசியம் என வரலாற்றுப் பூர்வ தீர்ப்பு வெளியானது.

அதனைப் பின்பற்றி, மேற்கண்ட 7 மாநிலங்களிலும் 2018-க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒருதலைப்பட்ச மதமாற்றங்களும் செல்லாது என தற்போது இந்திரா காந்தி அறிவிக்கக் கோருகிறார்.

அதனை எதிர்த்தே அரசு தரப்பு இப்புதிய வாதத்தை சமர்ப்பித்துள்ளது.

2018 தீர்ப்பு, இந்திரா காந்தி வழக்கிற்கு மட்டுமே வழங்கப்பட்ட ஒன்று; மாறாக ஒரு பொதுவான உத்தரவு அல்ல என Ahmad Hanir சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில் வரும் மே 21-ஆம் தேதி இவ்ழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!