
புத்ராஜெயா, மார்ச்-27-பெட்ரோல் மற்றும் டீசல் மானியத்திற்கான அரசாங்கத்தின் மாதாந்திர செலவு RM4 பில்லியனைத் தாண்டும் என, நிதியமைச்சான MoF தெரிவித்துள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியிலும், RON95 பெட்ரோலை லிட்டருக்கு RM1.99 என்ற மானிய விலையில் அரசாங்கம் நிலைநிறுத்தியிருப்பதே அதற்குக் காரணமாகும்.
2 வாரங்களுக்கு முன் உலக கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 90 டாலராக இருந்தபோது, மாதம் 3 பில்லியன் மானியச் செலவை அரசாங்கம் எதிர்கொள்ளும் என கணிக்கப்பட்டது.
இப்போது எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியிருப்பதால், அது 4 பில்லியனுக்கு எகிறுவதைத் தவிர்க்க முடியாது என MoF கூறியது.
மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றமும் உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயரக் காரணமாகும்.
இதையடுத்து அரசின் செலவுச் சுமையை குறைப்பதற்காக, BUDI95 மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RON95 எரிபொருளுக்கான மாத வரம்பு ஏப்ரல் 1 முதல் 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராக மறுசீரமைக்கப்படுவதாக பிரதமர் நேற்று அறிவித்தார்.
இருப்பினும், RON95 பெட்ரோலின் மானிய விலை லிட்டருக்கு RM1.99 ஆகவே தொடரும் எனவும், தகுதி பெற்றவர்களுக்கு டீசல் விலையும் நிலைத்திருக்குமென டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
சுமார் 90 விழுக்காட்டு பயனர்கள் இப்புதிய வரம்புக்குள் தான் எரிபொருளைப் பயன்படுத்துவதால் பெரும்பாலான மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தாது என நம்பப்படுகிறது.



