பினாங்கில் குடியேற்றக் கடத்தல் வழக்கில் மூவர் மீது குற்றச்சாட்டு

பட்டர்வெர்த், டிசம்பர் 30 – பினாங்கில் நடந்த குடியேற்றக் கடத்தல் சம்பவம் தொடர்பாக, இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மியான்மார் இளைஞர் ஆகிய மூவரும் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
அவர்கள் டிசம்பர் 2 ஆம் தேதியன்று புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளியின் முன்புறம் ஐந்து மியான்மார் நபர்களை கடத்த முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டபோது சம்பந்தப்பட்ட அவ்விரு பெண்களும் குற்றத்தை மறுத்துள்ளனர். ஆனால் மியான்மார் நபருக்கான குற்றச்சாட்டு மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுவதால் பின்னர் வாசிக்கப்படும்.
மனித மற்றும் குடியேற்றக் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது ஜாமீனில்லா குற்றம் என்பதால் அவர்கள் அனைவருக்கும் ஜாமீன் ஏதும் வழங்கப்படவில்லை. மேலும் நீதிமன்றம் இந்த வழக்கை ஜனவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.



