
வாஷிங்டன், ஆகஸ்ட் 27 – ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்கான தண்டனையாக, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரிகளை இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவின்படி, ஏற்கனவே இருந்த வரிகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன என்றும் உக்ரைனில் மாஸ்கோவின் போர் முயற்சிக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதென்றும் அறியப்படுகின்றது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை புது டில்லியைப் பெய்ஜிங்குடனான உறவை மேம்படுத்துவதற்கு வழி வகுக்குமென்று மதிப்பீடுகள் கூறுகின்றன.
இந்தப் புதிய வரிகள் சிறிய நிறுவனங்களுக்கு பேரிடியாக அமையும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் வாஷிங்டனின் இந்த நடவடிக்கை நியாயமற்றது மற்றும் அடிப்படையற்றது என்று புது டில்லி கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, வரிச்சுமையை குறைத்து குடிமக்களைப் பாதுகாக்கும் என பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக தனது சுதந்திர தின உரையில் உறுதியளித்திருந்தார்.