
கோலாலம்பூர், பிப்ரவரி-26 – மக்கள் பிரச்னைகளை மடானி அரசாங்கம் தீர்க்கும் தகவல்கள் மக்களைக் குறிப்பாக இந்தியர்களைச் சென்றடைய வேண்டும்.
அப்போது தான் அரசாங்கத் திட்டங்கள் குறித்தும் அது எடுக்கும் முயற்சிகள் குறித்தும் மக்களுக்குத் தெரிய வரும்.
அத்தகையச் செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் உள்ளூர் தமிழ் ஊடகங்கள் செல்வனே செய்து வருகின்றன.
எனவே, வணக்கம் மலேசியா உள்ளிட்ட மின்னியல் மற்றும் இலக்கவியல் ஊடகங்களுக்கு அரசாங்கம் நிதியுதவியோ ஊக்கத் தொகையோ அளிக்க முன்வரலாமே என, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் பரிந்துரைத்துள்ளார்.
27 ஆண்டுகள் தீர்க்கப்படாமலிருந்த
குவாலா குபு பாரு தோட்டப் பாட்டாளிகளின் குடியிருப்புப் பிரச்னையை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு அண்மையில் தீர்த்து வைத்தது.
அச்செய்தியை இந்தியர்களுக்குக் கொண்டு சேர்த்ததில் இந்த ஊடகங்களுக்கு பெரும் பங்குண்டு.
அரசாங்கக் கொள்கைகள் மக்களிடம் போய் சேருவது மிகவும் முக்கியமாகும்.
இல்லையென்றால் குறிப்பிட்ட தரப்பினர் சந்தடி சாக்கில் அவதூறு பரப்பி மக்களை அரசுக்கு எதிராக திருப்பி விடுவார்கள்.
எனவே இந்த ஊடகங்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என, மக்களவையில் பெர்னாமா சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய போது ராயர் கூறினார்.