
சீனா, பிப்ரவரி 5 – வடமேற்கு சீனாவில், ஒரு பெண் குளித்த பிறகு வீட்டில் உள்ள தண்ணீர் குழாயை மூட மறந்ததால், அக்குடியிருப்பு பகுதி ஒரே இரவில் பனியால் மூடப்பட்டது.
இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சுமார் ஒன்பது மணி நேரம் தண்ணீர் தொடர்ந்து வெளியேறியுள்ளது. அந்த இரவில் வெப்பநிலை மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்ததால், சாலையில் தண்ணீர் முழுவதும் உறைந்து பனிக்கட்டியானது.
அடுத்த நாள் காலை, அப்பெண்ணின் தந்தைதான் சாலையில் பனி இருப்பதை முதலில் கண்டுபிடித்துள்ளார். பின்னர் அது தங்கள் வீட்டிலிருந்து ஏற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, குடும்பத்தினர் மற்றும் தூய்மை பணி ஊழியர்கள் சேர்ந்து அப்பனியை அகற்றினர். மேலும் பனியை உருகச் செய்ய, அருகிலுள்ள கடைகளில் இருந்த உப்பு அனைத்தையும் அவர்கள் வாங்கியதாகவும் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அப்பெண் சமூக ஊடகங்களில் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, பலரும் அவரது நேர்மையான அணுகுமுறையைத் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.



