
கோலாலம்பூர், டிசம்பர் 8 – பிரசித்திப் பெற்ற படகு விழா, கீதா ஜெயந்தி அறிமுகம், தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு என முப்பெரும் அம்சங்களோடு கோலாலம்பூர் ஸ்ரீ ஜகன்நாத் மந்திரில் நேற்றிரவு களைக் கட்டியது.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் ISKCON-னின் மலேசியக் கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற அந்நிகழ்வில், MAHIMA எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அவர் தமதுரையில், காலத்தால் அழியாத பகவத் கீதையின் போதனைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு மற்றும் நவீன சவால்களை எதிர்கொள்வதிலும் ஆன்மீகத்தை வளர்ப்பதிலும் அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதிலும் ISKCON காட்டி வரும் கடப்பாட்டுக்குப் புகழாரம் சூட்டினார்.
மிகவும் அர்த்தமுள்ள அதே சமயம் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காகவும் டத்தோ சிவகுமார் ISKCON-னைப் பாராட்டினார்.
அதோடு ஆண்டுதோறும் ISKCON தமிழ்ப்பள்ளிகளுக்கு அன்பளிப்பாக பகவத் கீதை நூல்களை வழங்கி வரும் நிலையில், அவற்றில் 250 புத்தகங்களுக்கான செலவை டத்தோ சிவகுமார் ஏற்றுக்கொண்டார்.