
புத்ராஜெயா, அக்டோபர்-26, அரசாங்கத் துறைகளில் வேலை செய்யும் இந்துக்கள், அடுத்த வாரம் கொண்டாடப்படவுள்ள தீபாவளிக்கு 4 நாட்கள் வார இறுதி விடுமுறையை அனுபவிப்பர்.
இந்து அரசு ஊழியர்கள் தீபாவளிக்கு முதல் நாளோ அல்லது அடுத்த நாளோ ஒரு நாள் பதிவில்லா விடுப்பு எடுத்துகொள்ளலாம் என, பொதுச் சேவைத் துறை JPA அறிவித்துள்ளது.
இதன் மூலம் புதன்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரையிலும் அல்லது வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரையிலும் நீண்ட விடுமுறையை அவர்கள் அனுபவிக்கலாம்.
மாநில அரசு ஊழியர்கள், அரசு நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்களையும் அவ்வுத்தரவு உட்படுத்தியுள்ளதாக JPA கூறியது.
அந்தந்தத் துறை மேலதிகாரிகளின் ஒப்புதலோடு அந்த ஒரு நாள் கூடுதல் விடுப்பை எடுத்துகொள்ளலாம்.
ஆள்பலத் துறையின் பயிற்சி கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.