Latestமலேசியா

2025 பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு நற்செய்தி காத்திருக்கிறது; டத்தோ ஸ்ரீ ரமணன் சூசகம்

டாமான்சாரா, அக்டோபர்-16, வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2025 வரவு செலவு அறிக்கையில், இந்தியச் சமூகத்துக்கு பிரதமர் நற்செய்தியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாடுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அதனைக் கோடி காட்டியுள்ளார்.

எனினும், அது குறித்து மேலும் கருத்துரைக்க அவர் மறுத்து விட்டார்.

எது எப்படி இருப்பினும் 2025 வரவு செலவு அறிக்கையில் இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தாம் கவலைக் கொள்ளவில்லை என்றார் அவர்.

மடானி அரசாங்கத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் வாயிலாக இதுவரை 13 கோடியே 60 லட்சம் ரிங்கிட் நிதி இந்தியச் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டிருப்பதே அதற்குக் காரணமென அவர் கூறினார்.

டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மனது வைக்காமல் இதெல்லாம் நடந்திருக்காது; எனவே 2025 பட்ஜெட்டிலும் இந்தியர்களின் மனம் குளிரும் வகையிலான அறிவிப்புகளை பிரதமர் அறிவிப்பார் என ரமணன் சொன்னார்.

இவ்வேளையில், தீபாவளியை ஒட்டி நாடு முழுவதும் 10,300 இந்திய B40 குடும்பங்களுக்கு, உணவுக் கூடைகள் வழங்கப்படவிருக்கின்றன.

‘வணக்கம் மடானி’ திட்டத்தின் கீழ் அரிசி, முறுக்கு மாவு, சீனி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை அக்கூடைகள் உள்ளடக்கியிருக்கும் என, டத்தோ ஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

தொடக்கக் கட்டமாக சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் அத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாத இறுதியில் தீபாவளி பெருநாளுக்கு முன்னர் நாடு முழுவதும் அது விரிவுப்படுத்தப்படுமென்றார் அவர்.

கோத்தா டாமான்சாரா, செக்ஷ்ன் 7-ல் உள்ள பலநோக்கு மண்டபத்தில் வணக்கம் மடானி தீபாவளி உணவுக் கூடைகளை மக்களுக்கு வழங்கிய நிகழ்வில், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் பேசினார்.

சுமார் 700 இந்தியக் குடும்பங்கள் பங்கேற்ற அந்நிகழ்வு, இரவு விருந்துபசரிப்புடன், ஆனந்தா, சூபிர் கான் (Zubir Khan) உள்ளிட்ட பிரபல உள்ளூர் கலைஞர்களின் படைப்புகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!