Latestமலேசியா

சொத்துக்களை பிரகடனம் செய்யத் தவறிய குற்றச்சாட்டை டைய்ம் மறுத்தார்

கோலாலம்பூர், செப் 29 – எம்.ஏ.சி.சியின் நோட்டிஸில் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப சொத்துக்களின் விவரங்களை பிரகடனம் செய்யத் தவறிய குற்றச்சாட்டை முன்னாள் நிதியமைச்சரான துன் டைய்ம் ஜைனுதீன் மறுத்தார். எம்.ஏ.சி.சி வினியோகித்த சொத்து பிரகடன நோட்டிஸிற்கு ஏற்ப எம்.ஏ.சி.சியின் 2009 ஆம் ஆண்டு சட்டத்தின் 36ஆவது விதியின் உட்பிரிவு (2) இன் கீழ் சொத்து பிரகடன நோட்டிஸிற்கு ஏற்ப செயல்படத் தவறியதாக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் டைய்ம் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

38 நிறுவனங்களின் உரிமை , சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பகாங், கெடா, கோலாலம்பூர்ஆகிய இடங்களில் உள்ள 25 நிலங்கள் மற்றும் சொத்துகள் குறித்த விவரங்களை அவர் பிரகடனப்படுத்த தவறியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் அமானா சஹாம் நேஷனல் மற்றும் அமானா சஹாம் பெர்ஹாட்டில் வைத்திருந்த கணக்குகள் மற்றும் ஏழு ஆடம்பர வாகனங்கள் மீதான உரிமைகள் குறித்தும் பிரகடனப்படுத்தத் தவறியதாக டைய்ம் மீது குற்றங்சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம தேதி புத்ரா ஜெயாவிலுள்ள எம்.ஏ.சி.சி தலைமையகத்தில் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை, 100,000 ரிங்கிட்டிற்கும் மேற்போகாத அபராதம் ஆகிவவை அவருக்கு விதிக்கப்படலாம்.

சக்கர நற்காலியில் அமர்ந்த வண்ணம் நீதிமன்றத்திற்கு வந்த 85 வயதுடைய டைய்ம் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அது புரிந்ததா என நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் வினவியபோது புரிந்தது என்று அவர் மறுமொழி தெரிவித்தார். அவருக்கு ஒரு நபர் உத்தரவாதத்தின் கீழ் 280,000 ரிங்கிட் ஜாமின் வழங்குவதற்கு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸுரா அல்வி அனுமதித்தார். டைய்மிற்கு எதிரான வழக்கு மார்ச் 22 ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என நீதிமன்றம் நிர்ணயித்தது. அன்றைய தினம் அவரது மனைவிக்கு எதிரான வழக்கும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும். டைய்மை பிரதிநிதித்து வழக்கறிஞர் M. புறவளேன் ஆஜரானார். தமது கட்சிக்காரர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதோடு சிறிய அளவில் பக்கவாதத்திற்கு உள்ளானதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவரது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஒரு கண் அகற்றப்பட வேண்டியிருப்பதாகவும் சக்கர வண்டியில் மட்டுமே அவரது நடமாட்டம் இருப்பதால் Daim எங்கும் செல்ல முடியாத நிலையில் இருப்பதால் அவரது கடப்பிதழை முடக்குவது மற்றும் மாதத்திற்கு ஒரு முறை எம்.ஏ.சி.சி அலுவலகத்திற்கு வரவேண்டும் என்ற ஜாமினின் இதர நிபந்தனைகளை ஏற்க முடியாது என்றும் புறவளேன் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!