
ஜெர்லுன், நவம்பர்-4 – கெடா, ஜெர்லுனில் பேரப்பிள்ளையின் திருமண விருந்துக்கு கூடாரம் போட இடமில்லை என்பதற்காக, இரு கார்களை வீட்டின் கூரை மீது ஏற்றி வைத்து வைரலாகியுள்ளார் ஒரு முதியவர்.
இந்த ருசிகர சம்பவம் வியாழக்கிழமையன்று, ஆயர் ஹீத்தாம், கம்போங் மாத்தாங் பொங்லாய் கெச்சில் கிராமத்தில் நிகழ்ந்தது.
64 வயது அவிங் அலி அப்துல்லா (Awang Ali Abdullah), தனது உறவினர்கள் உதவியுடன் கிரேன் வைத்து Perodua Kancil, Proton Saga ஆகிய இரு கார்களையும் வீட்டுக் கூரை மீதேற்றினார்.
அதற்காக வீட்டுக் கூரைகளையும் காங்கிரீட்டுக்கு அவர் மாற்றியுள்ளார்.
இட வசதியில்லாததால் ஒரு தற்காலிக ஏற்பாடாக செய்த அச்செயல் வைரலாகும் என தாம் எதிர்பார்க்கவில்லை என்கிறார் அவாங் அலி.
1,500 பேர் கலந்துகொண்ட திருமண விருந்து, அவ்விரு ‘கூரைக் கார்களால்’ மேலும் களைக் கட்டியது.
இந்நிலையில் மேலும் ஏராளமானோர் அக்கார்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்க ஏதுவாக, இன்னும் ஓரிரு வாரங்களுக்கு அக்கார்களை கூரை மீதே வைத்திருக்கவும் அவாங் அலி முடிவுச் செய்துள்ளார்.