
ஜோகூர் பாரு, பிப்ரவரி-14 – சிங்கப்பூரில் பதிவுச் செய்யப்பட்ட வாகனங்களுக்கான VEP எனப்படும் வாகன நுழைவு பெர்மிட் முறையை முன்னறிவிப்பு இல்லாமல் மலேசியா அமுல்படுத்தாது.
கண்டிப்பாக அதன் அமுலாக்கத்திற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென, சிங்கப்பூர் வாகனமோட்டிகளுக்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் உறுதியளித்தார்.
VEP முறை கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது; ஆனால் இப்போதைக்கு, நினைவூட்டல்கள் மற்றும் நோட்டீஸ்களை மட்டுமே வெளியிட்டு சற்று மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறோம் என அவர் சொன்னார்
ஜோகூரும் சிங்கப்பூரும் ஜோகூர் பாலம் மற்றும் இரண்டாவது பாலம் வழியாக இணைக்கப்பட்டுள்ளன; இரு நாடுகளுக்கும் இவையிரண்டும் முக்கியமான போக்குவரத்து பாதைகள் ஆகும்.
இந்நிலையில், VEP முறை, சிங்கப்பூரிலிருந்து தரைவழிப் பாதைகள் வழியாக மலேசியாவிற்குள் நுழையும் வெளிநாட்டு வாகனங்களுக்காக கடந்தாண்டு அக்டோபர் 1-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
அம்முறையின் கீழ், வாகனங்களில் Touch ‘n Go e-wallet கணக்குடன் இணைக்கப்பட்ட RFID அட்டை பொருத்தப்பட வேண்டும்.
அவ்வட்டை இல்லாத வாகனங்கள் இன்னும் மலேசியாவிற்குள் நுழையலாம்; அவற்றுக்கு இப்போதைக்கு அபராதங்களுக்கு பதிலாக நினைவூட்டல்கள் வழங்கப்படும்.