
செர்டாங், பிப்ரவரி-5 – சிலாங்கூர், செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையின் கார் நிறுத்துமிடக் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து, SUV வாகனம் கிட்டத்தட்ட விழும் நிலைக்குச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று மதியம் நிகழ்ந்த சம்பவத்தில் தடம் புரண்ட அந்த SUV, இரும்பு வேலியையும் காங்கிரீட் சுவரையும் மோதியது.
வேகமாக மோதியதில், காங்கிரீட் சுவரைப் புடைத்துக் கொண்டு அந்த Honda WR-V-யின் பாதி உடல் வெளியில் தொங்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகியுள்ளன.
வாகனம் சுவரில் மோதியதில் ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் அங்கிருந்தவர்கள் பதறிப் போயினர்.
நல்ல வேளையாக கீழே விழவில்லை என டிக் டோக்கில் வீடியோவைப் பதிவேற்றிய ஒருவர் கூறினார்.
இவ்வேளையில் சம்பவ இடம் விரைந்த ஸ்ரீ கெம்பாங்கான் தீயணைப்பு-மீட்புத் துறை காரை வெளியில் எடுத்தது.
எனினும் அவர்கள் வருவதற்கு முன்பாகவே 38 வயது ஓட்டுநர் வாகனத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறி விட்டார்.