
கோத்தா பாரு, மார்ச்-23 – தொழில்முனைவோர் அல்லது சமூக ஊடகப் பிரபலங்களாக இல்லாத இளைஞர்கள் பலர், கிளந்தானில் ஆடம்பரக் கார்களுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
தெளிவான வருமான ஆதாரங்கள் எதுவுமின்றி, Mustang, BMW போன்ற சொகுசுக் கார்களில் அவர்கள் வலம் வருவதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் கூறினார்.
இதுவொன்றும் புதிதல்ல எனக்கூறிய IGP, இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அத்தகையோர் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது அம்பலமானதாகச் சொன்னார்.
அவர்களில் சிலர், கிளந்தான்-தாய்லாந்து எல்லையில் போதைப்பொருள், சுடும் ஆயுதங்கள், கால்நடைகள் போன்றவற்றை கடத்தி வந்துள்ளனர்.
இச்சட்டவிரோத . நடவடிக்கைகளில் இளையோரைப் பயன்படுத்தும் கும்பல்களை முறியடிக்க, எல்லைப் பாதுகாப்பும் உளவு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
சட்டப்பூர்வ வர்த்தகத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு கடத்தலில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கைப் பாயும்.
போதைப்பொருள் மற்றும் சுடும் ஆயுதக் கடத்தல் மையமாக கிளந்தான் தொடர்ந்து விளங்கி வரக் கூடாது என IGP மேலும் சொன்னார்.