கூச்சிங், டிசம்பர் 8 – சமூக நலத்துறையின் கீழ் பதிவுப் பெற்ற அனைத்து Taska சிறார் காப்பகங்களும், ஜனவரி 1 முதல் தத்தம் வளாகங்களில் பதிவு எண்களைப் பார்வைக்கு வைக்க வேண்டும்.
பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களுக்கு, அக்காப்பகங்களின் உரிமம் குறித்த உத்தரவாதத்தை வழங்க அது அவசியமென, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்சி ஷுக்ரி (Datuk Seri Nancy Shukri) தெரிவித்தார்.
புத்தாண்டில் தமதமைச்சு முக்கியத்துவம் வழங்கும் முன்னெடுப்புகளில் அதுவும் ஒன்று என அவர் சொன்னார்.
ஏன் பதிவுப் பெறாத சிறார் மையங்கள் செயல்படுகின்றன? எது பதிவுப் பெற்றது எது பதிவுப் பெறாதது என்பதை எப்படி தெரிந்துகொள்வதென என் அமைச்சைப் பார்த்து அடிக்கடி கேட்கின்றனர்.
எனவே தான், பதிவு எண்களைக் காட்சிக்கு வைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளோம் என்றார் அவர்.
இவ்வேளையில் ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான கவனிப்பும் 2025-ல் அமைச்சின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
15 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான கல்வி உதவி நிதி விநியோகம், 5 மில்லியன் ரிங்கிட் செலவில் ஆட்டிசம் சேவை மையத்தை நிர்மாணிப்பு ஆகியவையும் அவற்றிலடங்குமென டத்தோ ஸ்ரீ நேன்சி சொன்னார்.