
கோலாலம்பூர், ஜூன் 5 – ‘The Coverage Media’ இணைய ஊடகத்தின் முகநூல் பக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கான காரணத்தை விளக்கமளிக்க மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC உடனடியாக முன் வர வேண்டுமென்று துணை தகவல் தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங் (Teo Nie Ching) வலியுறுத்தியுள்ளார்.
MCMC-யின் அமலாக்க நடவடிக்கைகளில் தாம் தலையிடாத கொள்கையை பின்பற்றி வந்தாலும், இந்தத் தடைக்கான விளக்கம் பொதுமக்களின் நம்பிக்கையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் என அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 3 முதல் The Coverage Media முகநூல் பக்கம் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் தங்களுக்கு இதுபோன்ற தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் அது கூறியுள்ளது.
மேலும், MCA கட்சியுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தாங்கள் சுயாதீனமாக செயல்பட்டு வருவதாகவும் The Coverage Media விளக்கம் அளித்துள்ளது.



