Latestமலேசியா

TuJu, Waze உடன் போட்டியிட உருவாக்கப்படவில்லை – LLM தலைவர் விளக்கம்

கோலாலம்பூர், அக்டோபர் 27 – TuJu செயலி, Waze உடன் நேரடியாகப் போட்டியிடுவதற்காக உருவாக்கப்படவில்லை என்றும், சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சேவைகளை மேம்படுத்துவதே அதன் நோக்கம் என்றும் மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) தலைவர் டத்தோஸ்ரீ ஹஸ்னி முகமட் (Hasni Mohammad) தெரிவித்துள்ளார்.

TuJu செயலி மூலம் போக்குவரத்து நிலவரம், ஓய்வுப் பகுதிகள், வேகக் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவசர உதவித் தொடர்பு எண்களைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

தேசியப் பாதுகாப்பு மற்றும் பயனர்களின் தகவல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, Waze-க்குப் பதிலாக TuJu செயலியைப் பயன்படுத்துமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) கடந்த அக்டோபர் 20ஆம் தேதி வலியுறுத்தியிருந்தார். இருப்பினும், அதிகமானோர் பயன்படுத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து TuJu செயலியில் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் வழிகாட்டுதல் குறைபாடுகள் ஏற்பட்டன.

இதையடுத்து, செயலியின் தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு LLM மற்றும் செயலியை உருவாக்கிய Prosignal Consortium நிறுவனத்திடம் அமைச்சரவை கேட்டுள்ளது. TuJu பயன்பாடு கட்டாயமில்லை என்றும், Google Maps உள்ளிட்ட பிற செயலிகளையும் பயன்படுத்தலாம் என்றும் அமைச்சர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும், TuJu திட்டம் திறந்த ஒப்பந்தப்புள்ளி முறையின்றி வழங்கப்பட்டது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த ஹஸ்னி, இத்திட்டம் LLM இயக்குநர் குழுவின் ஒப்புதலுடன் செயல்படுத்தப்பட்டதாகவும், அரசாங்க நிதி பயன்படுத்தப்படாமல் முதலீட்டாளர்கள் மூலம் நிதியளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தற்போதைக்கு, TuJu சேவை நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பிற சாலைகளுக்கும் விரிவுபடுத்துவது தொழில்நுட்ப வசதிகள் மற்றும் நிதியைப் பொறுத்தது என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!