பாகான் டத்தோ, ஜூலை-29 – TVET எனப்படும் தொழிநுட்ப -தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் 200 இந்திய மாணவர்களை இலவசமாக சீனாவுக்கு அனுப்பவிருக்கிறது.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi) அந்த நற்செய்தியை அறிவித்துள்ளார்.
அந்த 200 பேரும் வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்துத் திரும்பினால், மேலும் 200 மாணவர்கள் அதே பயிற்சிக்கு அனுப்பப்படுவர் என, தேசிய TVET மன்றத்தின் தலைவருமான சாஹிட் சொன்னார்.
கல்வி விஷயத்தில் நாங்கள் தோல் நிறத்தைப் பார்ப்பதில்லை; மலாய்க்காரரோ, சீனரோ, இந்தியரோ, அனைவருக்கும் அரசாங்கம் முன்னுரிமைக் கொடுக்குமென்றார் அவர்.
பேராக், பாகான் டத்தோ நாடாளுமன்றத்திற்குட்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி உதவிகளை வழங்கிய நிகழ்வில் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சாஹிட் அவ்வறிவிப்பை வெளியிட்டார்.
அதில், 14 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 720 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
சீனாவில் TVET பயிற்சிகளை மேற்கொள்ள சபா, சரவாக் உள்ளிட்ட பல்வேறு இன மாணவர்களுக்கும் அரசாங்கம் வாய்ப்பு வழங்குமென சாஹிட் ஹாமிடி ஏற்கனவே கூறியிருந்தார்.
TVET படிப்புக்கு சீன அரசாங்கம் 1,000 மலேசிய மாணவர்களுக்கு கல்வி உபகாரச்சம்பளம் வழங்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.