Latestமலேசியா

UEC சான்றிதழ் அங்கீகாரம்; 16வது பொதுத்தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் – டத்தோ எம்.பெரியசாமி கணிப்பு

கோலாலாம்பூர், மே-19-சீன தனியார் இடைநிலைப்பள்ளிகள் வழங்கும் UEC தேர்வுச் சான்றிதழுக்கு மடானி அரசாங்கம் சிறப்பு அங்கீகாரம் வழங்கியிருப்பது, வரவிருக்கும் 16-ஆவது பொதுத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் எனச் சமூக-அரசியல் ஆய்வாளர் டத்தோ எம். பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மே 15-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, UEC சான்றிதழில் மலாய் மொழி மற்றும் வரலாறு பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், சில குறிப்பிட்ட பாடங்களின் கீழ் அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.

வரலாற்றை நோக்கினால், UEC சான்றிதழக்கான அங்கீகாரப் போராட்டத்தில் தான் Dong Zhong எனும் சீனப் பள்ளிகளின் சங்கமே உதயமானது.

இந்நிலையில், UEC அங்கீகாரம் என்பது கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் வாக்குறுதியாகும்; ஆனால் ஒற்றுமை அரசாங்கம் அமைந்ததிலிருந்து அது தாமதமாகி வந்தது.

DAP-யும் விடாது அழுத்தம் கொடுத்து வந்ததன் அடிப்படையில், அண்மையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், குறிப்பிட்ட சில மேற்படிப்புகளுக்கான பாதையாக UEC சான்றிதழுக்கு அங்கீகாரம் வழங்கினார்.

இது Dong Zhong மட்டுமின்றி ஒட்டுமொத்த சீன சமூகத்துக்குமே மகிழ்ச்சியைத் தந்துள்ளது; DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கும் இதற்காக அரசாங்கத்திற்கு நன்றித் தெரிவித்தார்.

ஆனால், இந்த முடிவு மலாய்க்காரர்களிடையே கட்சி வேறுபாடின்றி பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளதாக பெரியசாமி குறிப்பிட்டுள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம், UEC சான்றிதழை அங்கீகரிக்கத் தவறினால் அன்வார் அரசாங்கத்திற்கான தங்களின் ஆதரவை மீட்டுக் கொள்வோம் என 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட DAP எச்சரித்ததன் பின்னணியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்களும் கருதுகின்றனர்.

தவிர, இந்த முடிவினால் நாட்டின் தேசியக் கல்விக் கொள்கை புதைக்கப்பட்டு விட்டதாகக் கல்வியாளர்களும் பேராசிரியர்களும் தங்களின் கடுமையான கண்டனங்களை அடுக்கிக் கொண்டிருக்கின்றனர்.

UEC-க்கான அங்கீகாரம் சீன சமூகத்தில் அவரை மிகவும் தைரியமானவராகவும், அதே சமயம் மலாய் சமூகத்தில் நெருக்குதல்களுக்கு அடிபணிபவராகவும் காட்டும் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆகவே, 16-ஆவது பொதுத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு UEC பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென பெரியசாமி கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!