
சுபாங் ஜெயா, ஆகஸ்ட்-10-சனிக்கிழமை சுபாங் ஜெயாவில் ஒரே நாளில் நிகழ்ந்த அடுத்தடுத்த இரு சோகச் சம்பவங்கள், அங்கிருந்த ஒரு குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
USJ 22 முஸ்லீம் மையத்துக் கொல்லையில், தனது மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற வயதான தாய் ஒருவர், சடங்கு முடிந்த சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவரது 56 வயது மகன், அன்றைய நாள் காலையில் உயிரிழந்திருந்தார்.
மயானத்தில் தனது மகனின் உடல் அடக்கம் செய்யப்படுவதைப் பார்த்த 76 வயது தாய், சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
உடனடியாக செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிச் செய்தனர்.
ஒரே நாளில் குடும்பத்தின் இரு முக்கிய உறுப்பினர்களை இழந்து தவிக்கும் அக்குடும்பத்தினருக்குப் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.



