
கோலாலாம்பூர், மார்ச்-25-Corporate Mafia கும்பல் தொடர்பில் தொழிலதிபர் Victor Chin முன்வைத்த குற்றச்சாட்டுகளை, பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
Corporate Mafia கும்பலுடன் சட்ட ரீதியாக தாம் சந்தித்துள்ள பிரச்சனைகளை சுமூகமாக முடித்துகொடுக்க, பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 10 மில்லியன் ரிங்கிட் கோரியதாக, நேற்று வெளியிட்ட ஒரு 40 பக்க ஆவணத்தில், Victor Chin குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
பெயரைக் குறிப்பிடாமல் வெறும் “Mr R” என மட்டுமே அறியப்படும் அந்நபருக்கு, கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி 9.5 மில்லியன் ரிங்கிட் பணத்தை தாம் கொடுத்ததாகவும் அவர் சொன்னார்.
அந்த Mr R, Corporata Mafia-வுடன் இணைந்து NexG Bhd நிறுவனத்தை கட்டுப்படுத்த முயன்றதாகவும் Victor Chin குற்றம் சாட்டினார்.
இதையடுத்து R என தொடங்கும் பி.கே.ஆர் எம்.பிக்கள் மீது கவனம் திரும்பிய நிலையில், முதல் ஆளாக பண்டான் எம்.பி ரஃபிசி ரம்லி, அது தான் அல்ல என தெளிவுப்படுத்தினார்.
அடுத்து, சுங்கை பூலோ எம்.பி ரமணன் மீது கவனம் திரும்பிய நிலையில் தான், அவர் இந்த மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“நான் Victor Chin-னை ஒருபோதும் சந்தித்ததில்லை, பேசியதுமில்லை. சந்திக்காத ஒருவரிடமிருந்து 9.5 மில்லியன் எப்படி வாங்க முடியும்?” என ரமணன் கேள்வி எழுப்பினார்.
இந்த குற்றச்சாட்டுகள், பி.கே.ஆர் மற்றும் அரசாங்கத்தின் பெயரை களங்கப்படுத்தும் முயற்சி எனக் கண்டித்த ரமணன், யார் தான் அந்த “Mr R” என்பதை Victor Chin வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் எனவும் சவால் விடுத்தார்.
இக்குற்றச்சாட்டு குறித்து போலீஸில் புகார் செய்யுமாறு சுங்கை பூலோ பி.கே.ஆர் தொகுதியையும் அவர் உத்தரவிட்டுள்ளார்.



