
கோலாலம்பூர், அக்-22-உள்நாட்டில் உருவாக்கப்பட்ட TuJu செயலியின் வழிகாட்டி சேவை தற்காலிக இடையூறு ஏற்பட்டுள்ளது. Waze-க்குப் பதிலாக TuJu-வைப் பயன்படுத்துமாறு அரசாங்கம் ஊக்குவித்த மறுநாளே அத்தடை ஏற்பட்டுள்ளது. அச்செயலியைத் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெறுவதே அதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TuJuவில் உள்ள வழிகாட்டி சேவை தற்காலிகமாகச் செயல்படாது. ஆனாலும் சிசிடிவி நேரலைக் காட்சிகள் உள்ளிட்ட பிற அம்சங்கள் தொடர்ந்து இயங்கும் என்றும் மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM, X தளத்தில் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது. எனினும், வழிகாட்டி சேவை மீண்டும் எப்போது செயல்படும் என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தரவுப் பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் இஸ்ரேலுடனான தொடர்பு காரணமாக, அதிகாரப்பூர்வ அலுவல் பணிகளின்போது அரசு ஊழியர்கள் Waze செயலியைப் பயன்படுத்தக்கூடாது என அரசாங்கம் நேற்று உத்தரவிட்டிருந்தது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான தேசிய இணையப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அக்கட்டுப்பாடு அலுவல் பணிகளை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனம் (NACSA) தெளிவுபடுத்தியது. Waze செயலியின் பயன்பாட்டைக் கைவிட்டு, TuJu போன்ற உள்நாட்டுச் செயலிகளைப் பரிசீலிக்குமாறு பிரதமர் துறையும் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டிருந்தது.
LLM மற்றும் Prosignal Consortium Sdn Bhd ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் TuJu செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வழிகாட்டி சேவை, பயண நேரக் கணிப்பு, டோல் கட்டண விவரங்கள், போக்குவரத்து நிலவரங்கள் மற்றும் நெடுஞ்சாலை சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட வசதிகளை அது வழங்குகிறது. ஓய்வெடுக்கும் பகுதிகள் குறித்த தகவல்களையும் அவசரகால உதவிகளையும் அச்செயலி மூலம் பெற முடியும்.



