
கோலாலம்பூர், அக்-2–இலக்கவியல்நிறுவனமான Zetrix AI Bhd, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJவுக்கு செலுத்த வேண்டிய 200 மில்லியன் ரிங்கிட்டும் அதிகமான தொகை நிலுவையில் இருப்பதைப் போக்குவரத்து அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கு முன் MyEG Services Bhd என அழைக்கப்பட்ட Zetrix AI, வாகனச் சாலை வரி, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் போக்குவரத்து அபராதங்களுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த தொகையை JPJ-க்கு செலுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது. அந்நிலுவைத் தொகை 2023 மே மாதம் தொடங்கிய மூன்று ஆண்டு ஒப்பந்தத்தின் தொடக்கத்திலிருந்தே இருப்பதாக அறியப்படுகிறது.
இதனிடையே, நிலுவைத் தொகையை வசூலிப்பதுடன், நம்பகமான இலக்கவியல் பணம் செலுத்தும் முறையை உறுதி செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து அமைச்சு பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Zetrix AI-யின் அண்மைய ஆண்டு அறிக்கையில் 95.5 மில்லியன் ரிங்கிட் ‘பிற செலுத்த வேண்டிய தொகைகள்’ எனப் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு நிறுவனத்தின் நடப்புப் பொறுப்புகள் 577.4 மில்லியன் ரிங்கிட்டாகும், நடப்பு அல்லாத பொறுப்புகள் 1.25 பில்லியன் ரிங்கிட்டாக உள்ளன.
2000 ஆம் ஆண்டு MyEG Services Bhd என்ற பெயரில் தொடங்கிய நிறுவனம், 2025 ஜூலையில் Zetrix AI Bhd எனப் பெயர் மாற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.



