
கோலாலம்பூர், அக்- 2 – மடானி அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக மலேசியத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக் கூட்டமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அதன் செயலாளர் சுப்பிரமணியன் இராகவன் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்துடன் தொடர்ந்து கலந்துரையாடி வரும் கூட்டமைப்பு, தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்காக 30 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டைப் பெற்றதுடன், ஐந்து தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானத் திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது.
ஜோகூர் கூலாய் பெசார், ரினித் தோட்டம், சிலாங்கூர் நோர்த் ஹம்மோக் தோட்டம், பேராக் கிளேபாங் மற்றும் பினாங்கு சங்கை பக்காத்தான் தமிழ்ப்பள்ளிகள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றின் கட்டுமானப் பணிகள் Yayasan Didik Negara நிர்வாகத்தின் கீழ் தொடங்கியுள்ளன.
இதனிடையே, 2018 ஆம் ஆண்டு நிலுவையில் இருந்த 40 தமிழ்ப்பள்ளி கட்டுமானத் திட்டங்களில் 33 பள்ளிகளின் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் இரண்டு பள்ளிகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதுடன், மற்ற திட்டங்கள் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.
13 ஆவது மலேசியத் திட்டத்திற்காக தமிழ்ப்பள்ளி இடமாற்றம், புதிய கட்டடங்கள், பாலர் பள்ளி விரிவாக்கம், வெளிக்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு நிதி உள்ளிட்ட பரிந்துரைகளை கூட்டமைப்பு அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது. ஆண்டுதோறும் 100 மில்லியன் ரிங்கிட்டையும், 13ஆவது மலேசியத் திட்டத்தில் 500 மில்லியன் ரிங்கிட்டையும் ஒதுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்காக மடானி அரசாங்கம் 237.48 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்தது. தொடர்ந்து நிலச் சிக்கல்கள், இடமாற்றம் மற்றும் கட்டடத் திட்டங்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதுடன், SJKT Connect தரவுத் தள மேம்பாட்டுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.



