Latestமலேசியா

அடுத்தாண்டு முதலாம் ஆண்டில் 6 வயதுக்கு பிள்ளைகளைச் சேர்க்க 73,498 விண்ணப்பங்கள்

கோலாலம்பூர், நவ.18-2027ஆம் கல்வியாண்டில் ஆறு வயது பிள்ளைகளை முதலாம் ஆண்டில் சேர்ப்பதற்கு இதுவரை 73,498 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, 2027ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் 491,649 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் ஏழு வயது பிள்ளைகளுக்கான 418,151 விண்ணப்பங்களும், ஆறு வயது பிள்ளைகளுக்கான 73,498 விண்ணப்பங்களும் அடங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் பள்ளிக் கல்விக்கான தயார்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் எப்போது பள்ளியில் சேர வேண்டும் என்பதைப் பெற்றோர்களே தீர்மானிக்கும் வகையில் நெகிழ்வுத்தன்மை வழங்குவதே முக்கிய நோக்கம் என அது குறிப்பிட்டது. ஆறு வயதுப் பிள்ளைகளை முன்கூட்டியே சேர்ப்பதற்குத் தேவையான இடவசதிகள் இருப்பதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தப்படுவதாக நாடாளுமன்றத்தில் வினவப்பட்ட கேள்விக்கு கல்வியமைச்சு எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தது.

இந்த முன்கூட்டிய சேர்க்கை முறை 2027ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும், இது முற்றிலும் பெற்றோரின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியது. அதேவேளையில், ஏழு வயதில் முதலாம் ஆண்டில் சேர்ப்பதே வழக்கமான நடைமுறையாகத் தொடரும் என்றும் அது கூறியது.

மேலும், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மற்றும் குழந்தைகளின் பள்ளிக் கல்விக்கான தயார்நிலை ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேவைக்கேற்ப மாணவர் சேர்க்கை இடங்கள், ஆசிரியர் எண்ணிக்கை, வகுப்பறை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் உரிய மாற்றங்கள் செய்யப்படும். 2027ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு வகுப்புகள் சுமூகமாகச் செயல்படுவதை உறுதி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!