
ஷா ஆலாம், நவம்பர் 18 – நேற்று பெய்த கனமழையால் சிலாங்கூரில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 23 இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. அங்கு 63.5 மில்லிமீட்டர் முதல் 114.5 மில்லிமீட்டர் வரை மழை பதிவானது.
கிள்ளான் மாவட்டத்தில் 8 இடங்களும், கோம்பாக்கில் 7 இடங்களும், குவாலா சிலாங்கூரில் 5 இடங்களும், பெட்டாலிங்கில் 3 இடங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. குவாலா சிலாங்கூரில் அதிகபட்சமாக 114.5 மில்லிமீட்டர் மழை பதிவானது.
வெள்ளநீரை ஆறுகளுக்கு வெளியேற்றுவதற்காக 353 நீர்வாயில்களும், 161 நிரந்தர நீர் வெளியேற்றும் கருவிகளும் செயல்பாட்டில் உள்ளன. மேலும், ஒன்பது மாவட்டங்களில் 141 அவசரகால நகரும் நீர் வெளியேற்றும் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஷா ஆலாமிலுள்ள கம்போங் ஜாலான் கெபுன் (Kampung Jalan Kebun) பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முதல்நிலை பேரிடர் அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜாலான் கெபுனிலுள்ள மஸ்ஜிட் அன்-நயீம் (Masjid An-Naim) பள்ளிவாசலில் தற்காலிக நிவாரண மையமும் திறக்கப்பட்டது.



