
கோலாலம்பூர், நவ.18 – தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு மற்றும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, வரும் நவம்பர் 22ஆம் தேதி பத்துமலையில் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ள இவ்விழாவில், புதிய நூலகமும் திருக்குறள் கலைக்கூடமும் திறந்து வைக்கப்படுவதுடன், ‘கடாரம் கொண்டான்’ நூலும் வெளியீடு காணவுள்ளது.
பத்துமலைக் கோயில் காரியாலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில், காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இவ்விழா, மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவருக்கும் தமிழ் சார்ந்த அறிவையும் வாசிப்பு ஆர்வத்தையும் வளர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கப் புதிய நூலகம் துணைபுரியும் நிலையில், உலகப் பொதுமறையான திருக்குறளின் கருத்துகளையும் சிறப்புகளையும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் திருக்குறள் கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுசார் நிகழ்ச்சிகளுடன் கலை நிகழ்ச்சிகளும் விழாவுக்கு மெருகூட்டவுள்ளன. தேவஸ்தான சேவா நாட்டியக் கலைஞர்களின் மங்கல இசை, பிரபல பின்னணிப் பாடகர் செந்தில்தாஸ் குழுவினரின் இன்னிசை மற்றும் புலவர் இராமலிங்கம் குழுவினரின் நகைச்சுவைப் பட்டிமன்றம் ஆகியவை இடம்பெறவுள்ளன.
விழாவின் முக்கிய அங்கமாக, மாலை 6.10 மணிக்கு டான்ஸ்ரீ நடராஜா புதிய நூலகத்தைத் திறந்து வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து நடைபெறும் ‘கடாரம் கொண்டான்’ நூல் வெளியீட்டில், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் சிறப்புரை ஆற்றவுள்ளார். தொடர்ந்து, தேவஸ்தான அறங்காவலரும் அறப்பணிப் பகுதி பொறுப்பாளருமான டத்தோ என். சிவகுமார் திருக்குறள் கலைக்கூடத்தைத் திறந்து வைப்பார்.
தமிழின் சிறப்பையும் வாசிப்பின் அவசியத்தையும் முன்னிறுத்தும் இவ்விழாவில், தமிழறிஞர்கள், மாணவர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கோயில் தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது.



