Latestமலேசியா

வாழ்க்கைச் செலவு உயர்வைக் கண்டித்து பிரான்சில் 1,46,000 பேர் போராட்டம் – உள்துறை அமைச்சு

பாரிஸ், நவ. 18 — பிரான்ஸ் முழுவதும் வாழ்க்கைச் செலவு உயர்வைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 1,46,000 பேர் பங்கேற்றதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. தலைநகர் பாரிஸில் மட்டும் 28,000 பேர் போராட்டத்தில் கலந்துகொண்டதாக அமைச்சை மேற்கோள் காட்டி ஜெர்மனியின் டிபிஏ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

சிஜிடி (CGT) தொழிற்சங்கத்தின் கணக்குப்படி, நாடு முழுவதும் போராட்டத்தில் பங்கேற்றோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது. வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஊதியத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் எனச் சங்கத்தின் தலைவர் சோஃபி பினேட் வலியுறுத்தினார்.

கடந்த சில வாரங்களாகத் தொடரும் இப்போராட்டங்களில் இளைஞர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். பள்ளிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பதும், அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கைகள். போராட்டங்களைத் தொடர்ந்து அரசாங்கம் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்திய போதிலும், அந்த உயர்வு சில யூரோக்கள் மட்டுமே.

இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்திலும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றதாக உள்துறை அமைச்சு தெரிவித்திருந்தது. அந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றோர் எண்ணிக்கை 16 லட்சத்தை நெருங்கியதாக சிஜிடி மதிப்பிட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!