
ஜோகூர் பாரு, ஜூலை-18 – ஃபோரஸ்ட் சிட்டியில் இயங்கும் Network School விவகாரம் குறித்து ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
எந்தவொரு சட்ட மீறலோ அல்லது உரிம நிபந்தனை மீறல்களோ கண்டறியப்பட்டால், மாநில அரசும் உள்ளூர் அதிகாரிகளும் சமரசமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
விசாரணையில் முறைகேடுகள் உறுதியானால், நிறுவனத்தின் வணிக உரிமத்தை இரத்துச் செய்வது உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என TMJ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கக்கில் தெரிவித்தார்.
அதேவேளை, வெளிநாட்டினர் இந்நாட்டுக்குள் நுழைவது தொடர்பான விஷயங்கள் உள்துறை அமைச்சின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தத் தொழில்நுட்ப மையத்தைச் சுற்றி கடந்த ஒரு வாரமாக பெரும் சர்ச்சை நிலவி வருகிறது.
அனைத்துலகத் தொழில்நுட்ப தொழில்முனைவோர்களைக் கொண்ட இந்தத் திட்டத்தில், இஸ்ரேலியர்கள் தங்களின் இரண்டாவது கடப்பிதழ்களைப் பயன்படுத்தி பங்கேற்றதாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டுகள் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளை ஏற்படுத்தின.
குடிநுழைவு இலாகா, 260-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் ஆவணங்கள் சரியாக உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ள போதிலும், இஸ்கண்டார் புத்ரி மாநகர மன்றம் அந்நிறுவனத்தின் வளாகங்களில் உரிமம் மற்றும் கட்டடம் பயன்படுத்தும் விதிகள் மீறப்பட்டதற்காக ஏற்கனவே “வணிகத்தை நிறுத்துவதற்கான” அறிவிப்புகளை வழங்கியுள்ளது.
இது குறித்த விரிவான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



