
சென்னை, ஜூன்-6 – பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அண்ணாமலை விடுத்த ராஜினாமாவை தேசியத் தலைமை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் “நாம் தலைவர்கள்” (We The Leader) என்ற புதிய சமூக-அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
வாரிசு அரசியல் மற்றும் தனிநபர் துதிப்பாட்டு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த இயக்கத்திற்குப் பொது மக்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது.
இயக்கம் அறிவிக்கப்பட்ட வெறும் மூன்றரை மணி நேரத்திற்குள் 5.63 லட்சத்திற்கும் அதிகமானோர் இணையம் மூலம் இணைந்துள்ளனர்.
நிமிடத்திற்குச் சராசரியாக 35 பேர் என்ற வேகத்தில் மக்கள் பதிந்து வரும் நிலையில், நேற்றிரவு 7.30 மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்தது.
கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படவுள்ள இந்த இயக்கத்தின் கீழ், ‘Dr A.P.J அப்துல் கலாம் நெறிமுறைகள் மற்றும் அரசியலுக்கான மையம்’ நிறுவப்பட்டு, அதில் பயிற்சி பெறுபவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
BJP-யில் இளம் தலைவராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது 2031 தமிழகத் தேர்தலைக் குறி வைத்து இறங்கியுள்ளார்.



