ஹாங்காங், ஜூன் 6 – கோவிட்-19 பெருந் தொற்றுக்கு பிந்தைய சூழல் மற்றும் உரிமை கோரல் மீதான அடக்குமுறையை அடுத்து, அதன் சுற்றுலாத் துறையை உந்தச் செய்ய இன்னமும் போராடிக் கொண்டிருக்கும் ஹாங்காங், சுற்றுப்பயணிகளை கவர புதிய அணுகுமுறை ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த அணுகுமுறையால், தனது மக்களின் “முரட்டுத்தனமான” தோற்றத்தை மாற்றவும் ஹாங்காங் முயன்று வருகிறது.
அப்படி என்னதான் அணுகுமுறை அது என்கிறீர்களா?
மக்களிடையே, இனிய பண்புகளையும், கணிவான சேவையையும் ஊக்குவிக்கும் இயக்கம் தான் அது.
அண்மைய சில காலமாக, மோசமான நடத்தை காரணமாக ஹாங்காங் மக்கள் உலக தலைப்புச் செய்தியில் இடம் பெற்று வருகின்றனர்.
குறிப்பாக, சுற்றுலாத் துறை சார்ந்த தங்கும் விடுதி மற்றும் உணவு தயாரிப்பு துறைகளில், மோசமான சேவைகள் வழங்கப்படுவதாக அதிகமான புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, கடந்தாண்டு சுற்றுப் பயணிகளிடம் மிக மோசமாக நடந்து கொண்ட ஹாங்காங் டாக்சி ஓட்டுனர்கள் குறித்து மிக அதிகமான புகார்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த தோற்றத்தை களைந்து, ஹாங்காங் சுற்றுலாத் துறையை உந்தச் செய்யும் நோக்கத்தில், இவ்வார தொடக்கத்தில் நாகரீக மாற்றம் என்ற இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த இயக்கத்தின் வாயிலாக, கணிவாக பேசவும், அதிகமாக புன்னகை புரியவும் ஹாங்காங் மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அதுபோன்ற இயக்கம் 90 மற்றும் ஈராயிரத்தாம் ஆண்டு வாக்கில் கூட, ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்டது.
அதன் வாயிலாக, ஒரு காலத்தில் சுற்றுப்பயணிகளின் சொர்க்கப்புரியாக திகழ்ந்த ஹாங்காங்கின் தோற்றத்தை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.